பெ.சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர் 
அரசியல் பேட்டிகள்

‘ஜே.சி. பி. க்கு அதிகம் செலவு செய்கிறது அரசாங்கம்!'

இரா. தமிழ்க்கனல்

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும்நிலையில், ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் தங்கள் வலுவைக் காட்டும் வேலையில் இறங்கியுள்ளன. இடதுசாரி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியோ, மக்கள் கோரிக்கைப் பிரச்சாரம் என ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணத்தை நடத்தியது. பாதியளவு மாவட்டங்களுக்குச் சென்றுவந்துள்ள மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் பேசினோம்.

உங்களின் இந்தப் பிரச்சாரத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது?

எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாட்டிலும் விழுப்புரம் மாநில மாநாட்டிலும் தீர்மானித்தபடி, கட்சியின் சுயேச்சையான பிரச்சாரத்தை எடுத்துச்செல்வது இடதுசாரி மாற்றுக் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்வதுதான் இந்தப் பிரச்சார இயக்கத்தின் நோக்கம். பொதுவாக மக்கள் மத்தியில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பட்டா, நூறு நாள் வேலைத் திட்டம் என மக்கள் பல்வேறு பிரச்னைகளைத் தெரிவித்தார்கள். குறிப்பாக, பெண்கள் மத்தியில் விலைவாசி உயர்வைப் பற்றி கடுமையான அதிருப்தி இருக்கிறது. அவர்கள்தானே பெரும்பாலும் குடும்பங்களை கவனிக்கிறார்கள்?

விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக, மத்திய அரசைப் பற்றி, மாநில அரசைப் பற்றி என்னென்ன சொன்னார்கள்?

பெட்ரோல், சமையல் எரிவாயுவின் விலை குறித்து எல்லாரும் கடும் அதிருப்தியுடன் சொல்கிறார்கள்.  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு மட்டும் விலையைக் குறைப்பதில்லை என்பதைக் குறிப்பிடுகிறார்கள். சிலிண்டருக்கு ஐம்பது, 100 என விலையேறும்போது நேரடியாகத் தெரிகிறது. மற்றவற்றைவிட இதை எளிதாக உணர்ந்துகொள்கிறார்கள். விலையேற்றத்துக்கான நியாயமான எந்தக் காரணமும் இல்லை; தனியார் நிறுவனங்களுக்காக மத்திய அரசு இதைச் செய்கிறது என்கிறார்கள்.

வேலையின்மை இன்னொரு முக்கிய பிரச்னை... அடுத்து, நூறு நாள் வேலைத்திட்டம். ஆண்டுக்கு 100 நாள் தொடங்கி 40 நாள்வரை வேலை இருந்தது. இது 20, 15, 10 நாளெனக் குறைந்துவருகிறது. இதிலும் மூன்று நான்கு மாதங்கள்வரை கூலி பாக்கி வைத்திருக்கிறது அரசு. இது அவர்களை நேரடியாக பாதிக்கிறது. தனித்து வாழும் பெண்கள், முதிய பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். 

ஆண்டுக்கே 100 நாள்தான் அதிகபட்சம் இந்தத் திட்டத்தில் வேலை. இதை நம்பித்தான் வாழ்க்கையை ஓட்டக்கூடிய நிலைமையில்தான் இந்த மக்கள் இருக்கிறார்களா?

கிராமப்புறத்தில் விவசாயத்தில் வேலை குறைந்துவருகிறது. முழுக்க முழுக்க இதைச் சார்ந்திருக்கிற ஒருபகுதி மக்கள் ஊரகப் பகுதிகளில் இருக்கிறார்கள். உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் புலம்பெயர்ந்து கேரளம், கர்நாடகத்துக்குப் போய்விடுகிறார்கள். தனித்து வாழும் பெண்கள், வயதானவர்கள் முழுவதும் இதை நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களால் புலம்பெயர முடியாது. இது இல்லையென்றால் வேறு என்ன வழி என்பது பெரிய கேள்வியாக மாறியிருக்கிறது.

மாநில அரசாங்கத்தின் மீது மக்களுக்கு எப்படியான கருத்துகள் இருக்கின்றன?

மாநில அரசின் நலத் திட்டங்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பரவலாகக் கேட்கமுடிகிறது. முதியோர் உதவித்தொகை பெரும் பிரச்னையாக இருக்கிறது. ’ஏற்கெனவே வந்துகொண்டிருந்த உதவித்தொகையை நிறுத்திவிட்டார்கள்; கேட்டால், மேலிடத்து உத்தரவு என்கிறார்கள்; என்ன காரணமெனத் தெரியவில்லை’ என ஜனங்கள் சொல்கிறார்கள். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் கிடைக்கவில்லை என்பதையும் குறையாகச் சொல்கிறார்கள்.

கிராமப்புறத்தில் கனிமவளக் கொள்ளை பற்றி பல ஊர்களில் கவலையோடு சொல்கிறார்கள். அதிகாரிகள் பெருமளவில் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கைவளம் கொள்ளை போகிறது என்பது இன்னொரு பரவலான புகார்.

மகளிர் உரிமைத்தொகையிலும் இப்படி கிடைக்கவில்லை என நிறைய புகார்கள். எல்லா மாவட்டங்களிலும் இப்படி வந்துள்ளது. அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டுதான் ஜூலை 15இல் முகாம் நடத்துவதாக அறிவித்திருக்கிறது; பார்ப்போம்.

திராவிட மாடல் என அரசாங்க நிர்வாகம் புதியவகையாக பரபரப்பாக இருக்கிறது. அரசு எந்திர செயல்பாடு பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?

அரசு அதிகாரிகளிடம் தரும் மனுக்கள் மீது உரிய காலத்தில் தலையீடோ பதிலோ இல்லாமல், வழக்கமாக இருப்பதைப்போலத்தான் இருக்கிறது என மக்களுக்கு பெரிய மனக்குறையாக இருக்கிறது. அதிகாரவர்க்கம் உரியபடி செயல்படவில்லை; மக்களுக்கு ஆதரவாக அது மாறவில்லை எனச் சொல்கிறார்கள். எத்தனையோ திட்டங்கள் கொண்டுவந்தாலும் முதலமைச்சருக்கே மனுக்களை அனுப்பும்போதும் நிஜமான நடவடிக்கைக்கு இல்லை. உதாரணத்துக்கு, பட்டா மாறுதல்... மனு கொடுத்து ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியே வந்துவிடுகிறது. என்ன சொல்ல?

நகரங்களில் எப்படி இருந்தது...?

கிராமம், நகரம் இரண்டிலுமே மனைப்பட்டா என்பது பரவலான பொதுவான பிரச்னை. 100 ஆண்டுகள், 75 ஆண்டுகள் வசிக்கும் பகுதிகளில் நீதிமன்ற உத்தரவு என்று அதிகாரிகள் காலிசெய்யச் சொல்கிறார்கள்... இதில் நீதிமன்றத்தைக் காட்டி அரசாங்கம் தப்பிக்க முயற்சிசெய்யலாம். தீர்வு என்ன? இது சும்மா இடத்தை மாற்றுவது மட்டும் இல்லை. இவர்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி, அக்கம்பக்கத்தவருடன் உறவு என பல அம்சங்களும் பின்னிப் பிணைந்திருக்கிறது. அரசாங்கமும் நீதிமன்றமும் இதை யோசிக்கவேண்டும்.

நேற்று திருவள்ளூரில் தலித் மக்கள் குடியிருப்பை ஜேசிபியை வைத்து இடித்துத் தள்ளுகிறார்கள். இந்த ஆட்சியில் ஜேசிபிக்கு அதிகம் செலவுசெய்கிறார்கள். ஆக்கிரமிப்பு அகற்றல் எனும் பெயரில் சாதாரண மக்களை அப்புறப்படுத்துவது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

விவசாயிகள் தலைவராகப் பணியாற்றியிருக்கிறீர்கள்... காவிரிப் பாசனப் பகுதியில் நிலவரம் என்ன?

நெல்லுக்கான விலை 2,500 ரூபாய் அறிவித்திருக்கிறது, அரசு. இது நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய வாக்குறுதி. உரம், பூச்சிமருந்து, டிராக்டர் வாடகை எனப் பல வகைகளில் உற்பத்திச் செலவு கூடியிருக்கிறது. பழைய விலை போதுமானதாக இல்லை. காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டபிறகுதான் நான் டெல்டாவுக்குப் போனேன். முன்கூட்டியே தூர்வாரவில்லை என்பது டெல்டாவில் விவசாயிகளுக்கு பரவலான குறை. 

இந்த ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண்..

மக்கள் கருத்துதானே முதன்மை...(புன்னகையுடன்) நாங்கள் சந்தித்த அளவில் மக்களிடம் பிளஸ், மைனஸ் இரண்டுமே வெளிப்படுகிறது. சில நலத்திட்டங்கள் போய்ச் சேர்ந்திருக்கின்றன. பயன் கிடைத்தவர்கள் வரவேற்கிறார்கள். எந்தக் கையூட்டும் இல்லாமல் ஊழல் இல்லாமல் நேரடியாக வங்கிக்குப் பணம் வாங்கிவிடுகிறது. ஆனால், இப்படியான குடும்பங்களிலும் மேற்சொன்ன பல பிரச்னைகள் இருக்கின்றன. குடியிருப்பு உரிமை, வாழ்வதற்கான இடம் என்பது அடிப்படையான ஒன்று. அவர்களை வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தும்போது செய்த நல்லதெல்லாம் அடிபட்டுப் போய்விடும். அதை அரசு கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram